loader

சுழற்பயணம்

தினசரி பயணம் சுழற்ச்சியானது. நம்மோடு சேர்ந்து அதன் தூரமும் வளரக்கூடியது. வீட்டு முற்றம், வீட்டை சுற்றி ஓட்டம், பள்ளி, கல்லூரி, அலுவலகம் என நாம் சுழலும் தூரமும் அதிகரிக்கிறது. விதிவிலக்குகள் இருந்தாலும் பெரும்பான்மை இதுவே. சற்று விலகிநின்று பார்க்கும்போது, இந்த தினசரி பயணம் ஒரு கட்டத்தில் அன்னிச்சையாக மாறியிருந்தாலும் அது கற்றுத்தர முயலும் வாழ்வியல் தத்துவங்கள் வியப்பானது.

#1
எனது தினசரி பயணமும் படிப்படியாக அதிகரித்து ஒரு மணிநேர ஒருவழி பைக் பயணம் அன்னிச்சையாகிருந்தபோது, அலுவலகத்தை சென்றடைய பல்வேறு வழிகள் அதன் வளைவுகள், திருப்பங்கள், மேடு பள்ளங்கள், மெக்கானிக் கடைகள், இளைப்பற்றும் கடைகள் என பலவும் அத்துப்படியாகி இருந்தது. பழகிய பாதைகளும் சிலவேளைகளில் எதிர்பாராத தடைகளையோ அல்லது சோர்வையோ அளிக்க முற்படும்போது, அதை கடந்து செல்ல இந்த அறிதல் அவசியமாய் இருந்தது. இது, வாழ்க்கையென்னும் நெடும்பயணத்தின் சிறு வடிவமாகவும், அதை அணுகவேண்டிய வழிமுறைகளின் முன்மாதிரியாகவும் எனக்கு தோன்றியது.

#2
போக்குவரத்து முறையும் அதை உருவாக்கும் அல்லது பாதிக்கும் காரணிகலான கிழமை, நேரம், வானிலை, இன்னும் பல புற நிகழ்வுகள் என பலவும் புரிபட்டு, அதனோடு ஒத்திசைவாக சென்றபோது, வாழ்வில் ஒவ்வொருநாளும் வேறு ஒரு புதிய நாள் என உணர்த்தியது. சூழ்நிலையை புரிந்துக்கொள்வதை, திட்டமிடலை அவசியமாக்கியது.

#3
அடர்த்தியான நகர போக்குவரத்தில் குறுகலான சாலைகளில் செல்லும் மாநகர பேருந்துகள் சவாலானவை. முன்னேயுள்ள சாலை, எதிர்வரும் வாகனங்கள், சாலை குறியீடுகள் என அனைத்தையும் மறைத்து தன்னை நெருங்கி பின் தொடர்வோரை தன்னை விட்டு முந்தி செல்ல விடாமல் செய்யும் மாயத்தை அறிந்தவை. அவற்றை முந்தி செல்வதற்கான வாய்ப்பு பேருந்திற்க்கும் நம் வாகனத்திற்க்கும் உண்டான இடைவெளிக்கு நேர்விகிதத்திலும், நம் வாகனத்தின் உருவ அளவிற்கு எதிர்விகிதத்திலும் இருக்கும். போதுமான இடைவெளி விட்டு பின்தொடரும் வாகனங்கள் மட்டுமே முந்தி செல்ல முடியும். இது, ஒரு மனிதன் – கடவுள், மதம் தொடர்பான தத்துவார்த்த விசயங்களையோ அல்லது அரசியல் தலைவர், நடிகர், முன்மாதிரி மனிதர் என தனி நபரையோ தீவிரமாக பின்தொடர்வதால் எழும் பின்விளைவுகளை ஒத்திருந்தது. எவ்வளவு நெருக்கமாக ஒரு விசயத்தையோ/ நபரையோ பின்பற்றுகிறோமோ, அவ்வளவு கடினமானது தவறு என தெரியும்போது அதை கடந்து செல்வது என உணர்த்தியது. சரியான இடைவெளி இல்லாவிட்டால் அதுவே நம் முன்னேற்றத்திற்கான முட்டுக்கட்டையாக மாறுமென விளக்கியது.

வாழ்க்கை பயணத்திற்கு சுழற்பயணத்திலிருந்து.

Share