loader

வழக்கத்தின் சலிப்பு

சுற்றிலும் வகுப்பறை கட்டிடங்களும், எதிரே கொடிமர மைதானமும் கொண்ட அந்த பெரிய பள்ளி விழா மேடை கட்டிடம் தான் எனது முதலாம் வகுப்பறை. அரையாண்டை கடந்த ஒரு நாளில், மதிய உணவுக்கு பிந்தய ஒரு மந்த வேளை. அவ்வேளைகளில் பெரும்பாலும், நான்கு வாசிக்க தெரிந்த மாணவர்களை வாசிக்க சொல்லி அதை மற்ற மாணவர்களை திரும்ப சொல்ல செய்வார் ஆசிரியை. அன்று என் முறை. அ… ம்… மா… அம்மா, ஆ… டு… ஆடு… நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது. மு… ட்… டை… திடீரென… இந்த வழக்கமான செயலில் சலிப்புற்றவனாக, சற்று அலங்காரமாக சொல்ல எண்ணி… மிட்டை என்றேன். ‘அதெப்படி மு… ட்… டை… மிட்டை ஆச்சு… போ… போய் எடத்துல உக்காரு’ என்றார் ஆசிரியை. மறுநாள் சக மாணவர்கள் மிட்டை… மிட்டை… என கிண்டல் செய்தபோது ‘இல்லடா… எனக்கு தெரியும்… வேணும்னே தான் அப்டி படிச்சேன்’ என்று சொன்னபோதும் யாரும் நம்பவில்லை. முதல் வகுப்பில் நடந்திருந்தாலும், இந்த சம்பவம் ஏற்படுத்திய தாக்கம் ஏராளம். வழக்கத்தில் சலிப்புறும்போதெல்லாம், ‘ஒவ்வொருமுறையும் சரியாக செய்’ என்ற அடிப்படை விதியை நினைவூட்டி உந்தி தள்ளுகிறது, இப்போதும்.
Share