loader

வண்டும் கடவுளும்

மர தடுப்புகளால்  நான்காக தடுக்கப்பட்ட நீண்ட ஓட்டு கட்டிடம். மூன்று பக்கம் சுவரும், நீண்ட மறுபுறம் மூன்றடி உயர சுவரும் மீதி கம்பி வலையும் கொண்ட அமைப்பு. வகுப்பறைகளை பிரிக்கும் ஒவ்வொரு மர தடுப்புக்கு எதிரே இரு வகுப்பிற்கும் பொதுவான வாயிற்கதவு. கம்பி வலைக்கு வெளியே அடுக்கடுக்காய் மலர் செடிகளும் கொடிகளும். அதையடுத்து குட்டை மதில் சுவர். செடிகளுக்கும் கம்பிவலை சுவற்றிற்கும் இடையே நடைபாதை. இயற்கை கொஞ்சும் அந்த கட்டிடத்தின் இடது கோடிதான் எனது ஐந்தாம் வகுப்றை. அன்று, மாணவர்கள் அனைவரும் ஒருமித்து பாடத்தை கவனித்து கொண்டிருந்தோம். குண்டூசி விழுந்தாலும் சப்தம் கேட்கும் அமைதி. வீர்ர்ர்ர்ர்ர்ர்ர்… ர்ர்ர்ர்ய்ய்ய்…வீர்ர்ர்ர்ர… கதவருகிலிருந்து ஒரு வினோத சப்தம். வகுப்பிலிருந்த அனைவர் கண்களும் சப்தம் வந்த திசை நோக்கி திரும்பியது…  ஆசிரியை உட்பட. ஒரு கருவண்டு மலர்களில் தேனருந்திய மயக்கத்தில் கம்பி வலைகளுக்கிடையே கதைப்பேசிக்கொண்டிருந்தது. இடைவிடாத ரீங்காரத்தால் பாடத்தை நிறுத்திய ஆசிரியை, மாணவர்களை வாசிக்க சொல்லிவிட்டு கதவை நோக்கி நகர்ந்தார்…  கையில் பிரம்புடன்.

சிறிது நேரத்தில் சப்தம் நின்றது. முகம் முழுவதும் ததும்பும் புன்னகையுடன் உள்ளே நுழைந்தார் ஆசிரியை. சற்று யோசனையுடன் எங்கள் முன் நின்றவர், எங்களை பார்த்து… பசங்காளா… இறைவனுடைய மகிமையை பாருங்கள்… ‘இறைவா எங்களை காப்பாற்று’ என்று ஒரு கணம் கண்ணை மூடி பிரார்த்தித்து, பின் வண்டை அடித்தேன்… ஒரே அடியில் வண்டு அடிபட்டு கீழே விழுந்து இறந்தது… இதுதான் இறைவன் செயல்… இறைவன் என்னுடனே இருப்பதை நான் உணர்ந்தேன்… என்றார். சிலிர்ப்பான இறை அனுபவமாக இருந்தாலும் அந்த வயதுக்கே உரிய ஒரு இனம் புரியாத நெருடல் இருந்தது. அந்த நெருடல் பிற்பாடு எழுப்பிய விடை தெரியா கேள்விகள் பல…

  1. இது தற்செயலா கடவுற்செயலா?
  2. கடவுள் மனிதர்களுக்கு மட்டுமெனில் வண்டு எங்கே செல்லும்?
  3. மரணதண்டனை கொடுக்குமளவுக்கு வண்டு செய்த பாவமென்ன?
  4. அது நாத்தீக வண்டாக இருக்குமோ?
  5. ஒருவேளை அந்த வண்டு அன்று பிரார்த்திக்க தவறியிருக்குமோ?
  6. அல்லது அது வேறு மதமாக இருக்குமோ?
  7. ஒருவேளை அது வேறு மதமாக இருந்து பிரார்த்தனையும் செய்திருந்தால்?
  8. ஆசிரியையின் கடவுள் வண்டின் கடவுளை விட சக்தி வாய்ந்தவறாக இருப்பாரோ?
  9. கடவுள்களுக்குள்ளும் சண்டையும் போட்டியும் நடக்குமோ?
  10. இந்தமுறை ஆசிரியையின் கடவுள் வண்டை தண்டித்தது போல அடுத்தமுறை வண்டின் கடவுள் ஆசிரியையை தண்டிப்பாரோ?

கேள்விகள் இத்துடன் முடியவில்லை…

ஒருவேளை, இதுபோன்ற கேள்விகளுக்கு முடிவே இராதோ?

 

Share