அழுவதற்கு தைரியமில்லை என்பதைத் தவிர
வேறெந்த வருத்தமுமில்லை எனக்கு.
ஒவ்வொரு சந்திப்பிலும்
முந்தைய பிரிவின் காயத்தைத்தான்
மறுபடி மறுபடி
தையலிட்டுக் கொண்டிருந்தேன்.
முழுமையைத் தேடித் தேடி
சதையைத் துளைக்கும்
ஊசியின் பசி அது.
நீ போன பிறகுதான் தெரிந்தது.
முழுமை என்பது
கரையே இல்லாத கடல்,
நான் அதில்
மிதக்கக் கற்காத
ஒரு காகிதப் படகு.
சந்திப்பு
உள்ளங்கையில் வைத்துவிட்டுப் போனது
“இவர் உனக்கே உனக்கானவர்” என்ற
காற்றுக்கு முன் ஏற்றிய
ஒரு அகல் விளக்கை.
பிரிவு
நெஞ்சுக்குழியில் இறக்கிவிட்டுப் போனது
“அவர் கிடக்கட்டும்,
நீ யார்?”
என்றொரு
துருப்பிடித்த ஆணியை.
விடைக்கும் கேள்விக்கும் நடுவே
விடியவே விடியாத
ஒரு நீண்ட இரவு…
உணர்ச்சிகள் கரைபுரள
சித்தம் கலங்கியதில்
வானத்து நிலவுகூட
இரண்டாய் பிளந்து தெரிந்தது.
தெளிந்தும் தெளியாமல்
பாழுங்கிணற்றில் இறங்கும்
கயிறறுந்த வாளியைப் போல
உள்ளே… இன்னும் உள்ளே… நகர்ந்தேன்.
கடைசியில்
அந்தக் கிணற்றின் அடியில்
கலங்கிய நீரில் நடுங்கியது
ஒரு முகம்.
என்னுடையது.
முதன்முறையாக
நான்
என்னையே சந்தித்தேன்.
☯️